“வரலாற்றில் முக்கிய நிகழ்வு”… அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள் – கனிமொழி.!

கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்துக்குபின், தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Kanimozhi - Fair Delimitation

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நிறைவு பெற்றது. இதன், 2வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தொகுத்து வழங்கினார். இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று 3 மாநில முதல்வர்கள், 7 மாநில பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்த பின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெளிவான விளக்கம் வேண்டும். நியாயமான தொகுதி மறுவரையறைக்காக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள்.

மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் YSR காங்ரஸ் கட்சிகள் வர முடியாத நிலை இருந்ததால் பங்கேற்கவில்லை. ஆனாலும் இந்த கருத்தாக்கத்தில் உடன்பட்டே இருக்கிறார்கள். முதலமைச்சர் தலைமையில் அனைவரும், ஒரே அணியில் இணைந்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒருமித்த குரலில் பேச உள்ளோம். பிரதமரை சந்தித்து, தீர்மானங்களை அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் தெளிவான முடிவு இல்லை.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என கூறியது மத்திய அரசு. தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசிடம் தெளிவான விளக்கங்களையே நாங்கள் கேட்கிறோம். மத்திய அரசு, அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதன் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இந்த கூட்டு நடிவடிக்கை குழு கூட்டம் அமைந்தது. கூட்டத்திற்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதற்கு எதிராக ஓரணியில் நிற்கிறோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்