கந்தசஷ்டி விவகாரம் ! “பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.மேலும் பாஜக இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தியது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து, புதுச்சேரி போலீசார் சுரேந்திரனை ஒப்படைத்த நிலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களை கடந்து, கொரோனா யாருக்கு வந்தாலும் அம்மாவின் அரசு கனிவுடன் கவனித்து வருகிறது. இதற்கிடையே கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.