கால் அறுவை சிகிச்சைக்கு பின் கமலின் நிலை – மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை!
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நடிகர் கமலஹாசன் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும், சில நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார் என அவரது மகள்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரை உலகின் பிரபலமான நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமலஹாசன் அவர்கள், கடந்த சில நாட்களாகவே படப்பிடிப்பு மற்றும் அரசியல் பிரச்சாரம் என மிக பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக விபத்தில் ஏற்பட்ட கால் முறிவு காரணமாக நடைபெற்ற அறுவைசிகிச்சை மூலம் தற்போது தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் காலில் அதிகப்படியான வலி இருந்ததாலும் கமலஹாசன் அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடனடியாக இந்த சிகிச்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் வலது கால் எலும்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த தொற்றை அகற்றுவதற்கான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து உள்ளதாகவும், அவர் குணமடைந்து வருகிறார் தற்போது நலமாக உள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கமல்ஹாசனின் மகள்கள் ஆகிய நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் அவர்கள் தலைமையில் தங்களது அப்பாவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், தற்போது அப்பா நலமாக உற்சாகமுடன் இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அப்பாவை நலமுடன் கவனித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் 4,5 நாட்களுக்குப் பின்பு மருத்துவமனையிலிருந்து அப்பா வீடு திரும்புவார் அதன் பின் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மகள்கள், மக்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.