“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….
சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சிக் கூட்டத்தில், அக்கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு உள்ளிட்ட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் முடிந்து நடைபெறும் ம.நீ.ம கட்சியின் முதல் பொதுக்கூட்டமான இதில், கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
அதில் முக்கியத் தீர்மானமாக மக்கள் நீதி மய்ய கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மேலும், இளைஞர்கள் அதிகளவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 25இல் இருந்து 21ஆக குறைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
அடுத்ததாக, தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும். என்ற தீர்மானம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை நாட்டில் உள்ள கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
சாதிவாரியான கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் உடனடியாக மத்திய அரசு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வது, தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி என 16 தீர்மானங்களை இன்று மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டன.