விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!
மநீம தலைவர் கமல்ஹாசனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதையை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பின் போது மநீம பொதுச்செயலாளர் அருணாசலம் கூட இருந்தார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பை தொடர்ந்து, இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மநீம தலைவர் கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார்.
அதில் ” மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்” என கூறியுள்ளார். இதன் மூலம், கிட்டத்தட்ட அவருக்கு பதவி வழங்கப்போவது உறுதி எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.@maiyamofficial pic.twitter.com/y13skmSLvR
— Udhay (@Udhaystalin) February 13, 2025