அரசை பிறகு விமர்சித்து கொள்ளலாம்.. தற்போது மக்களுக்கு உதவுவோம் – கமல்ஹாசன் பேட்டி
மிக்ஜம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தத்தால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பான்மையான இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், சில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. அதுமட்டுமில்லாமல், உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மறுபக்கம் பல்வேறு இடங்களில் நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுக சேவை செய்பவர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
கேப்டனை கேவலப்படுத்துகிறீர்கள்.. வன்மம் வேண்டாம்.! பிரேமலதா விஜகாந்த் ஆவேசம்.!
அந்தவகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வடசென்னை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.
இதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர், இது பேரிடர். கடந்த காலத்தை விட தற்போது அதிக அளவு பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை. மக்களுக்கு உதவுவது தான் இப்பொது முக்கியம்.
காலநிலை மாற்றம் என்பது உலக முழுவதும் நிகழும் ஒன்றுதான். இதனால் இக்கட்டான நேரத்தில் யார், யாரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசை பிறகு விமரிசித்து கொள்ளலாம். மழை வெள்ளத்தால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்.
மக்களுக்கு தேவையானவற்றை செய்ய அனைவரும் முன்வரவேண்டும். மீட்பு பணிகளுக்காக அனைவரும் களத்தில் ஒன்றாக பணியாற்ற வேண்டும். நாளை மறுநாள் முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். மேலும், மழைக்கால பாதிப்புகளை தடுக்க நீண்டகால திட்டத்தை தீட்ட வேண்டும் எனவும் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.