கமல் கொடுத்தது கார் அல்ல… கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தை.!
கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, கமல்ஹாசன் கார் கொடுக்கவில்லை, கார் வாங்க அட்வான்ஸ் பணம் கொடுத்ததாக அவரது தந்தை கூறியுள்ளார்.
கோவையைச்சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா, கடந்த சில தினங்களுக்கு முன் தான் பணிபுரிந்துவந்த தனியார் பேருந்து நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு காரை வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த செய்தி வெளியானதை அடுத்து ஷர்மிளாவின் தந்தை, கமல் சார் கார் கொடுக்கவில்லை, கார் வாங்குமாறு அட்வான்ஸ் பணமாக 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் என்றும் கூறினார். மேலும் ஷர்மிளாவிடம் சோர்வடையாமல் தைரியமாக இருக்கும்படியும், உங்களைப்போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் எனவும் கூறியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்தார்.
முன்னதாக கோவை தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா, கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் திமுக எம்.பி கனிமொழி பயணித்த தினத்தன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணசீட்டு கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷர்மிளாவுக்கு கமல் கார் கொடுத்ததாக செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.