கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் நடவடிக்கை – சிபிசிஐடி
யாரேனும் புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதன்பின் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கைது செய்து வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் வழக்கின் புதிய திருப்பமாக, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பில் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சி, மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவி மரண வழக்கில் புலன் விசாரணையை பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனிநபரோ அல்லது நிறுவனமோ அல்லது யாரேனும் புலன் விசாரணை நடத்தினாலும், ஈடுபட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இதனை மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் எனவும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.