கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் மனு!
கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் இன்று தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி அமர்வில் அளித்த மனுவில் ரத்தினம் உள்பட 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல, பள்ளி மாணவி தற்கொலைதான் செய்துகொண்டார் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். நீதிபத்தில் இளந்திரையனின் கருத்து உச்சநீதிமன்றம் வகுத்துள்ள சட்ட விதிகளை மீறிய செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேறு ஒரு நாளில் முறையீடு செய்யுமாறு வழக்கறிஞர் ரத்தினத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மாணவி மரண வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நீதிபதி இளந்திரையன் ஆக.26-ல் ஜாமீன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.