கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்… 3 பேர் கைது 10 பேரிடம் தீவிர விசாரணை..!
கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் இதுவரை 35பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி , மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் என பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிபிசிஐடி அதிகாரி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் குழு அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சாராய வியாபாரி கோவிந்தராஜன் என்ற கன்னுகுட்டி கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து அவரது சகோதரன் தாமோதரன் மற்றும் கோவிந்தராஜன் மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் தீவிர விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு சாராய வியாபாரி சின்னத்துரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே 200 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 900 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.