கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு!
கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு.
கள்ளக்குறிச்சி கலவரத்தால் சேதமடைந்த கனியாமூர் தனியார் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு இன்று தொடங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி மூடப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் வன்முறையாக வெடித்தது. கடந்த ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதும் சூறையாடினர்.
இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. பள்ளி சீரமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. அதனால் பள்ளியை திறக்க அனுமதி தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், 145 நாட்களுக்கு பிறகு இன்று கனியாமூர் தனியார் பள்ளி திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.