கள்ளக்குறிச்சி விவகாரம்: 4 பேர் உயிரிழந்த நிலையில் முக்கிய நபர் கைது.!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 25க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உடல்நிலை மோசமடைந்த 4 பேர் ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். ஆய்வு நடத்திய பிறகு, இந்த இறப்பிற்கான முழு காரணத்தையும் கண்டறிந்து முழு விவரத்தையும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கள்ளச்சாராயத்தால் இறந்ததாக கூறப்படும் 4 நபர்களும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் புதிய தகவல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது. முழு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கள்ளச்சாராயத்தால் இறப்பா என உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.