கலாஷேத்ரா விவகாரம்..! மகளிர் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு..!
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார்:
மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கிவரும் சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
ஹரி பத்மன் கைது :
இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதவி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபத்மனுக்கு, ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தநிலையில், ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசாரணை:
மாநில மகளிர் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி.மகேஸ்வரன் தலைமையில் மாணவிகளிடம் நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுமார் 20 நிமிடங்கள் நடந்த விசாரணையில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு இடையூறு ஏதும் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டது.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு :
இந்நிலையில், கலாஷேத்ரா விவகாரம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரித்த மகளிர் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை மூடப்பட்டு முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தருமாறு கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு, கலாஷேத்ரா பதில்தர வேண்டும்:
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் சாட்சியாக உள்ள மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் பெயரை வெளியிட விரும்பாத 7 மாணவிகள் தொடர்ந்த இந்த வழக்கில் பதில்தர, மத்திய அரசு மற்றும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.