காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்.? இணை ஆணையர் விளக்கம்!
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் காவல் துறை எதற்காக என்கவுண்டர் நடத்தப்பட்டது என விளக்கமளித்து உள்ளனர்.
சென்னை : பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நிலுவையில் இருந்து வருகிறது. தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான், சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது காக்கா தோப்பு பாலாஜி சிக்கியுள்ளார். அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்த போது, தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜி நெஞ்சில் குண்டு பாய்ந்ததை தொடர்ந்து மயங்கி விழுந்த பாலாஜியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் மருத்துவமனைச் செல்லும் வழியில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்து விட்டார். இந்த என்கவுண்டர் குறித்தும் அங்கு நடந்த சம்பவம் குறித்தும் இணை ஆணையர் பிரவேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் பேசிய போது, “சம்பவம் நடந்த இடத்தை சோதனை இட்ட போது அதிகாலை வாகன தணிக்கையின் போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. மேலும், அதனுடன் பெரிய அரிவாளும் இருந்தது. அதன் பிறகு கஞ்சாவுடன் தப்பி சென்றவரை தான் காவல்துறையினர் விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர்.
அப்போது பாலாஜி துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளார். அந்த சூழ்நிலையில் போலீசார் தங்களை தற்காத்து கொள்ளவே சுட்டுள்ளனர். இதில் அவரது இடது மார்பில் குண்டு பாய்ந்தது. மயங்கி விழுந்த பாலாஜியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
இந்த தாக்குதலுக்கு பிறகே, அந்த நபரின் பெயர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவர் மீது கொலை முயற்சி, கொலை, கொள்ளை போன்ற 58 நிலுவை வழக்குகள் இருப்பது தெரிந்தது. அவருடன் வந்த சத்யமூர்த்தி என்பவரை விசாரணை செய்து வருகிறோம். மேலும், பாலாஜி ஓட்டி வந்த கார் யாருடையது எனவும் விசாரணை செய்து வருகிறோம்.
அதே போல அவர் என்ன காரணத்திற்காக வண்டியில் கஞ்சா ஏற்றி கொண்டு சென்றார் என்பதையும் விசாரித்து வருகிறோம். மேலும், அந்த வாகனத்தில் பிடிபட்ட 10 கிலோ கஞ்சா, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளோம்”, என இணை ஆணையர் பிரவேஷ் குமார் கூறி உள்ளார்.