கச்சத்தீவு விவகாரம்… திமுக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் விமர்சனம்.!
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து எனக்கு கடிதம் எழுதுகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அது தாரை வார்க்கப்பட்டது என ஆவேசமாக பேசினார்.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு, தற்போது அந்நிய நாட்டுக்குச் சொந்தமாக உள்ளது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது பாரத மாதாவின் ஓர் அங்கத்தைச் சிதைப்பதாகும் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரம் பேசும் பொருளாக மாறியது. அந்தவகையில், நேற்று ராமநாதபுரம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின் கச்சத்தீவு குறித்து பேசினார்.
முதல்வர் கூறுகையில், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து எந்த தீர்மானமும் அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை, 1974 ஜூன் 25ம் தேதி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. அது சட்டம் அல்ல,
கச்சத்தீவை காக்க தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மீறியே கச்சத்தீவு கொடுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. கச்சத்தீவை தாரை வார்த்ததை எல்லா நிலையிலும் கருணாநிதி எதிர்த்தார். கச்சத்தீவு உலக வரைபடத்தின் எந்த காலகட்டத்திலும் இலங்கையின் பகுதியாக இருந்தது இல்லை.
கச்சத்தீவு எப்போதுமே இந்தியாவின் ஒருபகுதி தான் என்பதை சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். கச்சத்தீவை மீட்பதற்கு பலமுறை மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்து விட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதை உறுதி செய்யும் அறிக்கையை கலைஞர் வெளியிட்டார். கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என கச்சத்தீவு குறித்து, மத்திய அரசு விமர்சனம் குறித்தும் முதலமைச்சர் பேசினார்.
மேலும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்னும் அதிகமாகியுள்ளது என்றர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், கச்சத்தீவை தாரை வார்த்தது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திமுக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என கடுமையாக விமர்சித்தார்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கச்சத்தீவு விவகாரமாக இருந்தாலும், மற்ற விவகாரமாக இருந்தாலும் தமிழகத்தின் நலன் குறித்து ஸ்டாலின் யோசிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி முடங்கி கிடப்பதற்கு முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை தான் காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் தமிழகத்திற்கு அநீதியை இழைக்கிறார்.
மோடி பதவியேற்ற பின் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படை தாக்குதல் குறைந்துள்ளது. 2014-ல் இருந்து இன்று வரை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததே இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வை நீக்க முடியாது என தெரிந்தும் தேர்வுக்காக ஊக்கப்படுத்தாமல், மாணவர்களை குழப்பி அவர்களை வைத்து அரசியல் செய்கின்ற போக்கை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.