கே.எஸ். அழகிரி பேச்சு அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது – அண்ணாமலை

Default Image

கே.எஸ் அழகிரிக்கு, ஏதொரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசிகொண்டியிருக்கிறார் என அண்ணாமலை விமர்சனம்.

தமிழகத்திற்கு முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்ட ஆர்.என்.ரவியை நியமித்துள்ளனர்.

இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் பல இடத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக துணை ராணுவ தளபதி நியமிக்கப்பட்டார் என கூறினார்.

இதுபோன்று பல துறைகளில் சாதனை புரிந்தவர்கள் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநராக வருவதற்கு ஐபிஎஸ் அதிகாரிக்கு தகுதி இல்லை என்று சொல்லுகிறார்கள். பீகார் முதல்வர் ஐஏஎஸ் அதிகாரியாகவும், கிரண்பேடி ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்தவர். உத்தராகண்ட், நாகலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் முன்னதாக பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தார்கள்.

அவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் சிறப்பு தான் செய்திருக்கிறார்கள் தவிர, எந்த தவறான விஷயத்தையும் செய்யவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கிராமத்தில் சொல்லுவார்கள். அதுபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரிக்கு, ஏதொரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசிகொண்டியிருக்கிறார் என விமர்சித்தார்.

மேலும், என்.ஆர் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டத்திற்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், கேஎஸ் அழகிரி மட்டும் எதற்காக காழ்ப்புணர்ச்சி அரசியலை ஆளுநரை வைத்து செய்து கொண்டியிருக்கிறார் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்