#Justnow:கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் – நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் விவசாயம்,நீர்வளம்,கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என்றும் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில்,கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் நாளை முதல்வர் வழங்குகிறார்.அந்த வகையில்,விவசாயிகளுக்கு தென்னங்கன்று, காய்கறி,பழச்செடிகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.
மேலும்,இத்திட்டத்தின் மூலம்,தமிழக கிராமங்களில் தரிசாக இருக்கும் நிலங்களை சாகுபடிக்கு ஏற்றவாறு மாற்றுதல்,நீர்வள ஆதாரங்களை அதிகரித்தல்,சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல்,வேளாண் விளைபொருட்களின் மதிப்பினைக்கூட்டி அதனை சந்தைப்படுத்துதல், மேலும்,கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர் வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.