#Justnow:உச்சநீதிமன்றத்தில் இன்று ஈபிஎஸ் வழக்கு – தனிநீதிபதி விசாரிக்கும் ஓபிஎஸ் மனு!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த மேல்முறையீட்டு மனுவில்,அதிமுக உட்கட்சி விவகாரம் தொடா்புடைய இவ்வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் உரிய வகையில் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவில் அவசரமாக விசாரித்து கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இத்தகைய உத்தரவை பிறப்பித்தது.இதனால்,புதிய தீா்மானங்கள் எதுவும் கழகத்தால் எடுக்க முடியவில்லை எனவும்,ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில்,பொதுக்குழு தொடர்பாக ஈபிஎஸ் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
அதேசமயம்,வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார்.பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று முன்தினம் மாலைதான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாகவும்,எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க அவசர வழக்காக இதனை எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று இன்று அதனை விசாரிப்பதாக தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.