#JustNow: ஆளுநரை ரஜினி சந்தித்ததில் என்ன தவறு? – அண்ணாமலை
ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என அண்ணாமலை கேள்வி.
சென்னை நீலாங்கரையில் தேசிய கொடியுடன் கடலில் பயணம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உணர்ச்சிபூர்வமாக தன்னுடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாடுவதற்காக தேசிய கொடியை நமது இல்லத்தில் ஏற்றுகின்றோம். ஜம்மு காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசிய கொடி தான் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்றவுள்ளோம்.
இதுபோன்று ஒவ்வொரு விஷயத்தையும் பல இந்தியர்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்றார்கள். பேச எதுவும் இல்லாத சில அரசியல் தலைவர்கள் வீட்டில் தேசிய கொடியை ஏற்றுவதை கூட அரசியலாக்குகிறார்கள். எந்தளவுக்கு பிற்போக்கு தனமாக அவர்கள் சிந்தனை இருக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும் என தெரிவித்தார். இதன்பின் தமிழக ஆளுநர், ரஜினி சந்திப்பு குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான மனிதன், பலகோடி மக்களின் அன்பை பெற்றவர். நதிநீர் இணைப்பு, காவேரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் நலனுக்காக எப்போதும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூப்பர் ரஜினிகாந்தை, தமிழக ஆளுநர் அழைத்து பேசியுள்ளார். ஆளுநர் பல இடங்களில் பல மனிதர்களை சந்திக்கின்றார். ஆளுநர் மாளிகைக்கு பலர் சென்று வருகிறார்கள். பல பேரை சந்தித்து வரும் ஆளுநர், ரஜினிகாந்தையும் சந்தித்து பேசியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநரை ரஜினி சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?, ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி தெரிவித்ததால் என்ன தவறு எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினர். ஆளுநர் பலரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அரசியல் இல்லாத வழக்கை கிடையாது. இரண்டு மனிதனை திட்டுவது மட்டுமே அரசியல் இல்லை. ரஜினி அரசியல் பேசினேன் என்று கூறுவது, சமுதாயத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை பேசினேன் என்றுதான் அர்த்தம். இதில் மத்திய, மாநில திட்டங்கள், பணிகள் குறித்து பேசியிருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, திடீரென ஆளுநர் ஆர். என் ரவியை ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல்நாள் சந்தித்தார். ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்றார். அவரின் இந்த பேட்டி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.