#JustNow: நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு – மின்வாரியம் போட்ட அதிரடி உத்தரவு!
பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 37,317 மாணவர்களும், பிளஸ் 1 பொதுத்தேர்வை 8 லட்சத்து 83,884 பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 56,474 பேரும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காப்பு மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்ததாக தகவல் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.