#JustNow: ஓபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு – ஆதரவாளர்கள் போராட்டம்!
சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய நிலையில், யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி குடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். ஒன்றை தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்களும், மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனால் கட்சியில் இருவேறு கருத்துக்கள் உலா வருவதாக தெரிகிறது. இந்த சமயத்தில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது தொடர்பாக இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே, அவரகத்து ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். எனவே, கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது, யார் அந்த ஒற்றை தலைமை பொறுப்பை கைப்பற்ற போகிறார்? என்பது குறித்த பேச்சுவார்த்தையால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் ராயப்பேட்டை, அவரது இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நந்தனம், ராயப்பேட்டை இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருப்பதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 10 நிமிடம் மேலாக மறியல் போராட்டம் நடந்துள்ளது. பின்னர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொண்டர்களை கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிமுக ஒன்றை தலைமை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தும் நிலையில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை இல்லத்தில் ஓபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு 23-ஆம் தேதி கூடும் நிலையில், ஒற்றை தலைமை குறித்த விவாதம் சூடு பிடித்துள்ளது.