#JustNow: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் – முதலமைச்சர் இன்று ஆலோசனை!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த முதல் ஆலோனை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் வேளாண் பாதுகாப்பிற்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்மை மற்றும் அதை சார்ந்த தொழிலகங்கள் மேம்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் வகையில் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட, காட்டுமன்னார்கோவில், அறந்தாங்கி உள்ளிட்ட பல வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எரிவாயு உள்ளடங்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவை தொடங்க முடியாது என்றும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதனை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் தலைமையில் 24 பேர் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் அமைக்கப்பட்ட நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது.