#JustNow: நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம் – முதலமைச்சர் உறுதிமொழி!
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் எனது குப்பை – எனது பொறுப்பு என்ற அடிப்படையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை சென்னை ராயபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகையுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினார்.மேலும், ராயபுரத்தில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற முதலமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனிடையே, நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதில், என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும், பொறுப்பாகும்.
பொது இடங்களில் குப்பை வீசாமல் இருப்பதே நகர தூய்மைக்கான முதல் காரணம் என்பதை நான் நம்புகிறேன். தூய்மை பணிகளுக்கு என்னை அர்பணித்துக்கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை வீசமாட்டேன். பிறரையும் குப்பைகளை வீச அனுமதிக்கமாட்டேன். குப்பைகளை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன்.
தூய்மை நகருக்கான என் முயற்சியில் நான் பங்கேற்பதுடன், என் குடும்பத்தாரையும் சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், என் நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என்பதை நான் உறுதியாக இருக்கிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்கள் உள்பட பலரும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.