#JustNow: அக்.20-ல் வடகிழக்கு பருவமழை தொடக்கம் – வானிலை மையம்
வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
வடகிழக்கு பருவமழை அக்.20-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும் என்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு அதிக புயல் உருவாக வாய்ப்பு உளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை தென்மேற்கு பருவமழை காலம் என்றும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் வானிலை ஆய்வு மாமியால் கணக்கிடப்படுகிறது.
இந்த சமயத்தில் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை 4 மாதங்களாக பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. செப்டம்பர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என கூறப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை வருகிற 20-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.