#JustNow: அஞ்சல் வழியே புதிய மின்னணு குடும்ப அட்டை – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அஞ்சலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவு.
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் அஞ்சல் (தபால்) வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டையை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் என்றும் புதிய குடும்ப அட்டையுடன் அதனை செயலாக்கம் செய்யும் முறை குறித்த விளக்க குறிப்பும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ.25-ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கப்படும். குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பிக்கும் போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ.20 மற்றும் தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் ரூ.45-ஐ கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் அமைச்சா் சக்கரபாணி அறிவித்திருந்தார்.