#JustNow: அரசு நிகழ்வுகள்.. இதற்கான தடை நீக்கம், ஆனா இது தொடரும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
கொரோனா காலத்தில் அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.
கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிகழ்வுகளில், அரசு அதிகாரிகளுக்கான மத்திய உணவு, இரவு உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. புதிய வாகனங்களை வாங்குவதற்கான தடை நீடித்தாலும், பழைய பழுதடைந்த வாகனங்களை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை பயிற்சி, கொரோனா தொடர்பான பயிற்சி தவிர மற்ற அனைத்து பயிற்சிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. புதிய கணிப்பொறிகள் வாங்க கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல விமான பயணம் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவு தொடர்கிறது என்றும் தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், பரிசுப்பொருள், பூங்கொத்து, சால்வை, நினைவு பரிசுகளை அரசு செலவில் இருந்து வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. 20 பேருக்கு மேல் பங்கேற்கும் மாநாடு, கருத்தரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், இவற்றை ஆன்லைன் மூலமாக நடத்துவது சிறந்தது என்றும் தமிழக அரசின் அரசாணையில் கூறியுள்ளது.