#JustNow: பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர். 12-ஆம் வகுப்பு மாணவியின் மரணம் பற்றி பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களிடம் ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 12-ஆம் தேதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இது சந்தேக மரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இதன்பிறகு 13ம் தேதியில் இருந்து தொடர் நடைபெற்றது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17-ஆம் தேதி கனியாமூர் தனியார் பள்ளியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், கலவரமாக மாறி பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பாக பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடினர். மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னரே உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் அடிப்படையில் கடந்த 23-ஆம் தேதி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அன்றே சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று பெரியநெசலூரில் உள்ள மாணவியின் வீட்டில் தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.