#JustNow: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது – ஓபிஎஸ்

Default Image

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பன்னீசெல்வம் தரப்பு மனு.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் மனு அளித்துள்ளார். அந்த கடிதத்தில், வரும் 23ம் தேதி வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.

பொதுக் குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு, முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி (ஒற்றை தலைமை) விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 18-ஆம் தேதி தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு என தெரிவித்தனர். ‘இடமில்லை’ என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமா இருக்காது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். பொதுக்குழுவை தள்ளிவைக்க வலியுறுத்தி இபிஎஸ்-க்கு ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். தற்போது, பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்று ஓபிஎஸ் கையெழுத்துடன் கூடிய மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்