“ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்!” உச்சநீதிமன்றம் காட்டம்!
ஒரு மாநிலத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் என்னென்ன என்பதை டாக்டர்.அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார் என நீதிபதி பர்திவாலா கூறினார்

சென்னை : தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதப்படுத்துகிறார். ஆளுநர் திருத்தம் சொல்லி இரண்டாவது முறையாக அனுப்பப்படும் மசோதாவுக்கு கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதனையும் வருடக்கணக்கில் கிடப்பில் போடுகிறார். இதனால் மசோதா காலாவதி பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் ரவி மீது தமிழக அரசு தரப்பு முன்வைத்து இருந்தது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஆளுநர் தரப்பிற்கு உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு சரமாரி கேள்விகளை கேட்டது. “உரிய காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். ஆண்டு கணக்கில் நிறுத்தி வைத்த பிறகு அந்த மசோதா காலாவதி ஆகிவிடும் என்றால் அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு எதற்காக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு ஆளுநர் தரப்பில், “மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லை, முரணாக இருக்கிறது என ஆளுநர் கருதியதன் காரணமாக தான் முடிவெடுக்கவில்லை.” எனக் கூறப்பட்டது. ” ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக தெரிவிக்காமல் மறுஆய்வு செய்வதற்காக அரசு எப்படி மசோதவை திருப்பி அனுப்பும்?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதில் கேள்வி எழுப்பினர்.
“மசோதா சரியாக தான் உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றபோதிலும், மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பமால் கால தாமதப்படுத்தி பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவது என்பது என்ன நடைமுறை?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் சாசன அமர்வின் படி, ஒரு மாநிலத்தின் ஆளுநரின் அதிகாரங்கள் என்னென்ன என்பதை டாக்டர்.அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார் . என நீதிபதி பர்திவாலா கடுமையாக கூறினார் . ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் முடிவுகளில் (மசோதாக்களில்) ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநரால் செயல்பட முடியும் என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் செய்தது.
மசோதாவை நிறுத்திவைத்துவிட்டு, திருப்பி அனுப்பினாலே, அவரின் விருப்புரிமைக்கு இடமில்லாமல் போய்விடும், இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி கூறினார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.