சற்று முன்…ரூ.662 கோடியில் திட்டப்பணிகள்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை:ரூ.662 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுக்கு அர்பணித்தல்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தற்போது தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம்,கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்பு பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும்,ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி,தென்காசி, செங்கல்பட்டு,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.