பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கு : சஞ்சய் ராய்-க்கு ஜாமீன்.? கடுப்பான நீதிபதி.!
சஞ்சய் ராய் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் 40 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் நீதிபதி கோபமடைந்தார்.
கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் தரப்பு, சஞ்சய் ராய்க்கு ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி பமீலா குப்தா முன் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்ட நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வரவில்லை. இது தொடர்பான தகவல் நீதிபதிக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், கோபடமடைந்த நீதிபதி, சிபிஐ தரப்பு வரவில்லை என்றால், ஜாமீனுக்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு இல்லை என்று சஞ்சய் ராய்க்கு நாங்கள் ஜாமீன் வழங்கிவிடலாமா.? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கை சிபிஐ தரப்பு மிக சோம்பலாக விசாரணை செய்து வருவதாக நீதிபதி குற்றம் சாட்டினார்.
சிபிஐ-யின் இம்மாதிரியான நடவடிக்கை நீதித்துறைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்று நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார். அதனை தொடர்ந்து 40 நிமிடங்கள் கழித்து சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகினர் . பின்னர் சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சஞ்சய் ராய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் , சிபிஐ விசாரணை வளையத்தில் முக்கிய நபராக இருக்கிறார். அவர், ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி தொடர்பான வேறொரு வழக்கில் மற்றொரு சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.