திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிகிறது: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருவதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது நிகழ்த்திய உரையின் போது இதை அவர் குறிப்பிட்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையில் பங்கேற்ற நட்டா பின்னர் சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசும் போது, “தேசியத்தில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது, பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருக்கிறது, பிரதமர் மோடிக்கு பிடித்த மாநிலம் இது. உலகில் எங்கு சென்றாலும் தமிழ் பற்றியும், தமிழ் புலவர் பற்றியும் பிரதமர் மோடி பேசுகிறார், தமிழ்நாட்டின் பெருமையான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்றால் கலாசாரம், பண்பாடு, பழமையான மொழி குறித்து பெருமை கொள்கிறோம்.
தடையை மீறி சென்னையில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற ஜே.பி நட்டா
தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிகிறது. திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது, சென்னையில் இன்றைய தினம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது எமர்ஜென்சியை நினைவுப்படுத்துகிறது. தமிழர்கள் கடும் உழைப்பாளிகள், ஆனால் தமிழகம் மிகமோசமான தலைவரை பெற்றுள்ளது” என்றார்.