சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கேரளா மாநிலம் மூணாரில் கைது செய்யப்பட்டார்.

சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர், பல்வேறு கிறிஸ்தவ மத போதக நிகழ்ச்சிகளை “கிங் ஜெனரேஷன்” எனும் பெயரில் நடத்தி வந்துள்ளார்.
கடந்த வருடம் (2024) மே மாதம் நடைபெற்ற ஒரு மத போதக நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது , ஜான் ஜெபராஜ் , அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு முத்தமிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமிகள் அவர்கள் பெற்றோரிடம் கூற , பெற்றோர்கள் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டது. தன் மீது போக்ஸோ வழக்கு பதிப்பட்டதை அறிந்த ஜான் ஜெபராஜ் அதன் பிறகு தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜான் ஜெபராஜை தேடி கோவை போலீசார் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பி செல்லாமல் தடுக்க அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து செல்போன் சிக்னல்கள் மூலமாக அவர் கேரளா மாநிலம் மூணாரில் இருப்பது கண்டறியப்பட்டு நேற்று நள்ளிரவு ஜான் ஜெபராஜை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜ் கேரளாவில் இருந்து கோவை காந்திநகர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.