ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் நேரில் ஆஜராக சம்மன்!ஜெயலலிதா மரணம் தொடர்பான விசராணை …
ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்திடம் ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனும், ஜெயலலிதாவின் அண்ணன் மருமகன் மாதவனும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட 10 மருத்துவ அறிக்கைகளுக்கும், இறந்த பின் அளித்த அறிக்கையும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தனர். எனவே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கையை வழங்குமாறு தமிழக சுகாதாரத்துறையிடம் ஆணையம் கோரியிருந்தது. அதன்படி, அப்பலோ மருத்துவமனை, மற்றும் எய்ம்ஸ் மருத்துமவனைகளின் மருத்துவ சிகிச்சை அறிக்கைகள் மற்றும் மரண அறிவிப்பு அறிக்கை
அடங்கிய தொகுப்பினை தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆணையத்திடம் சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும். எம்.எம்.சி. மருத்துவமனை டீனும் அரசு மருத்துவருமான முரளிதரன், வழக்கறிஞர் ஜோசப் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுளளதாகக் கூறப்படுகிறது. சசிகலா உள்பட 60 பேருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியான நிலையில் வரும் 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலக் கெடு முடிவடைகிறது. விசாரணைக்கு ஏற்கெனவே அழைக்கப்பட்டவர்கள் அளித்த விவரங்கள் போதுமானதாக இல்லை என்றும், மேலும் ஏராளமானோர் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டி இருப்பதாலும், விசாரணை ஆணையத்துக்கான காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தருமாறு ஆணையம் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு இதற்கு முன் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்பட பலரும் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.