விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.மேலும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியானது. அதேபோல் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.அதேபோல் மதிமுக,விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
அதேபோல் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் திருப்பூரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில்,பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த உறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.