அவர் மேல நம்பிக்கை இல்லைனு அம்மா ஜெயலலிதாவே சொன்னாங்க! ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த உதயகுமார்!
பதவி ஆசையால் பாஜக கூட்டணியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டவர் தான் ஓ பன்னீர்செல்வம் என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்து பேசியிருந்தார். அவர் பற்றி பேசிய ஓ.பன்னீர்செல்வம்” டாக்டர் வெங்கடேஷ் (சசிகலா அண்ணன் மகள்) சோபாவில் அமர்ந்திருக்க பக்கத்தில் உதயகுமார் என்ன நிலையில், எப்படி இருந்தார் என்பதை பற்றி நான் இப்போது இந்த இடத்தில் பேசினால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது. எனவே, எங்களை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த இடத்தில் கூறுகிறேன்” என பேசியிருந்தார்.
இதனையடுத்து, அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு வீடியோ வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதில் பேசியதாவது ” ஓ.பன்னீர்செல்வம் கட்சி இணைவதற்கு தடையாக இருப்பதற்கு நாங்கள் தான் காரணம் என்று பேசி வருவது ஆண்டவனுக்கே பொறுக்காது. தமிழ்நாட்டுமக்களுக்கு, அப்பாவி தொண்டர்களும் உங்களுடைய பேச்சை கேட்டு ஏமாறக்கூடாது என்பதால் தான் நான் பேசுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் பிரச்சைனையே அதிகாரம் வேண்டும் என்பது தான். சமீபகாலமாக அவர் செய்யும் நடவடிக்கைகளில் அவர் அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார் என்பது தெரிகிறது. அதிகாரம் இருந்தால் அமைதியாக இருக்கீறீர்கள்..அதிகாரம் இல்லை என்றால் ஒரு பிரச்சினை போல ஒன்றை உருவாக்கி விடுகிறீர்கள். கட்சி ஒற்றுமையாக யாரும் தடையாக இல்லை. இது நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை நிச்சயமாக தமிழக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும்.
பதவி ஆசை இருந்த காரணத்தால் மத்திய அமைச்சர் ஆகிவிடலாமா? என்று அவர் ஆசைப்பட்டதும் எனக்கு தெரியும். அரசியல் நாகரீகம் கருதி நான் அதனை சொல்லவில்லை. தயவு செய்து நீங்கள் பேசுவது உண்மை என்று நினைத்து பேசாதீர்கள்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆவர் ” ஓ.பன்னீர்செல்வம் அதிகாரத்திற்காகவும், அவர்களுடைய பிள்ளைகளின் அதிகாரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் இப்படியான நடவடிக்கைகளை செய்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். அதிமுக என்பது நமக்கு வாழ்வு கொடுத்த ஒரு இயக்கம். எனவே, அதனை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம் என்று நான் சொன்னேன். நான் மட்டுமில்லை உண்மையான தொண்டர்கள் எல்லாரும் அப்படி தானே சொல்வார்கள்? இதற்கு கோபப்பட்டு அவர் எனக்கு எச்சரிக்கை விடுகிறார்.
மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் அம்மாவுக்கு அவரை பற்றி நன்றாகவே தெரியும். அம்மா மறைந்துவிட்ட காரணத்தால் உங்களை தள்ளி வைத்துவிட்டார்கள் என்றும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என்பது போல ஒரு நாடகம் ஆடிக்கொண்டு இருக்குறீர்கள். நீங்கள் தமிழகத்தில் எவ்வளவு பெரிய பதவிக்கு வந்தாலும் எங்களுக்கு ஆட்சபனை இல்ல.
ஆனால், அதே சமயம் உண்மையை மறைத்துவிட்டு பொய் பேசாதீர்கள். அதைப்போல, அம்மா ஜெயலலிதா நற்சான்று கொடுத்ததாக தனக்குத்தானே அவர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஓ.பன்னீர்செல்வம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக என்னிடமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருக்க பக்கத்தில் நான் எந்த நிலைமையில் இருந்தேன் என சொல்லுங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் நீங்கள் சொன்ன படி நான் எங்கு அமர்ந்திருந்தேன் என்று தயவு செய்து சொல்லுங்கள் அந்த உண்மை உலகுக்கு தெரியட்டும். எனக்கு எச்சரிக்கை விடுக்கும் தகுதி உங்களுக்கு இல்லை. அப்படியே நீங்கள் எச்சரிக்கைவிட்டாலும் எந்த எச்சரிக்கையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக தான் இருக்கிறேன். ” எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.