“ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம்” தங்கம் தென்னரசுக்கு ஜெயக்குமார் பதிலடி!
கடந்த 2021-ல் திமுக வெற்றி பெறாமல் இருந்திருந்தால் அந்த கட்சியே காணாமல் போயிருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது, ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் ” ஒரு மடிக்கணினி ரூ.20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்காக தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக திறந்த டெண்டர் கோரப்படும்.
அதனடிப்படையில் ஒதுக்கீடு தொகையில் மாற்றம் இருக்கும். தரமான மடிக்கணினிகள் தான் மாணவர்ளுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவர் வேறு எங்கோ உட்கார்ந்து உங்களுடைய எதிர்க்கலாம், உங்கள் தொண்டர்களின் எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போக செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு கணக்குப் போட்டு கொண்டு இருக்கிறார்” என மறைமுகமா விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
இதனையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுக்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது ” கணக்கு பற்றி நிதியமைச்சர் நிறைய பேசினார். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம். பட்ஜெட் கணக்கை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். ஆடு நனைகிறது என ஓநாய் அழுததாம்” என பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து அடுத்ததாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ” தங்கம் தென்னரசு பேசியதை நகைச்சுவையாக தான் எடுத்துக்கொள்ள முடியும். அவர் பேசியதை சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் பேசியது ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம் என்கிற கதையாக தான் இருக்கிறது. கடந்த 2021-ல் திமுக வெற்றி பெறாமல் இருந்திருந்தால் அந்த கட்சியே காணாமல் போயிருக்கும். ஆனால், அதிமுக அப்படி இல்லை. உங்கள் கட்சி பிரச்னையை நீங்கள் பாருங்கள், எங்கள் கட்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம்” எனவும் தெரிவித்தார்.