#BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு ..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை காலம் மேலும் 3 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நேற்றுடன் விசாரணை கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து 36 கட்டமாக பல்வேறு நபர்களிடம் விசாரணையை அருணா ஜெகதீசன் ஆணையம் நடத்தியிருந்தது. 1426 பேருக்கு சம்மன் அனுப்பி 1,048 பேரிடம் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.