அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு! வந்தது வழிகாட்டு நெறிமுறைகள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்த சூழலில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்க்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி , மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக் கூடாது, காளைகளுக்குத் தேவையற்ற வலி மற்றும் கொடுமைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ள குழு நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அளிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் செயலாக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான www.jallikattu.tn.gov.in இணையதளத்திற்கு சென்று நாம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.
அதைப்போல, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் முழு வீடியோவும் பதிவு செய்யப்படவேண்டும். இந்த ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் கடிதம் வாயிலாக முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.