ஜல்லிக்கட்டு வழக்கு நவ.29க்கு ஒத்திவைப்பு!
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், கலாச்சார விதியின் கீழ் பாதுகாப்பு பெறுகிறதா? என வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதம்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்பு சட்ட விதிகளை மீறுகின்றனவா? என்றும் ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதம் முன்வைத்தார். ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என தமிழ்நாடு கருத முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்பட கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், கலாச்சார விதியின் கீழ் பாதுகாப்பு பெறுகிறதா? எனவும் வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதத்தை முன்வைத்தார்.
பாரம்பரிய நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கவும், அவற்றின் இன வளர்ச்சிக்கும் ஜல்லிக்கட்டு சட்டம் உதவுகிறதா?, மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை, பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வதையில் சேர்ப்பது, ஒரு கொசு கடிக்க போகும்போது அதை கொன்றுவிட்டால் விலங்கு வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
விலங்குகள் மீது இரக்கம் உள்ளிட்டவைதான் இருக்க வேண்டும், வழக்கை திசை திருப்பாதீர்கள் என நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான நீதிபதிகள் வாதத்தை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.