“இதன் நோக்கமே சிதைந்து விடும்” – அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி!

சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவையை நிறுத்த பிரசார்பாரதி அமைப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில்,எந்த நோக்கத்திற்காக அவை தொடங்கப்பட்டதோ,அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ‘ஏ’ அலைவரிசையை மட்டுமின்றி,இந்தியாவில் உள்ள எந்த மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார்பாரதி கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“சென்னை ‘ஏ’ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை 720 KHz மத்திய அலையில் ஒலிபரப்பாகி வருகிறது.உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வானொலிகளில் சென்னை ‘ஏ’ அலைவரிசையும் ஒன்று.இதில்,விவசாயம், குடும்பநலம்,இசை நிகழ்ச்சிகள்,நாடகம்,கிராமப்புற இசை,செய்திகள்,திரை இசை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் என பலவகை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர்.
இந்நிலையில்,சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவையை நிறுத்த பிரசார்பாரதி அமைப்பு முடிவு செய்திருப்பதாகவும், எந்த நேரமும் அதன் சேவை நிறுத்தப்படக்கூடும் என்று தெரியவந்துள்ளது.சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் அண்மையில் மூடப்பட்ட நிலையில்,சென்னை வானொலியின் அடையாளமான முதன்மை அலைவரிசையையும் மூட முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை ‘ஏ’ அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும்.இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ,அந்த நோக்கமே சிதைந்து விடும்.
மத்திய அலை, சிற்றலையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப டிரான்ஸ்மிட்டர்கள் தேவை. அவற்றை பராமரிப்பது செலவு பிடிக்கும் விஷயமாகும்.இதனால்,இவை அமைக்கப்பட்டுள்ள நிலங்களை தனியார்மயமாக்கி வருவாய் ஈட்டும் நோக்குடன் தான் மத்திய அலை, சிற்றலை வானொலிகளை மூட பிரசார்பாரதி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.இது மிகவும் தவறான முடிவு மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டிய முடிவும் ஆகும்.
எனவே,சென்னை ‘ஏ’ அலைவரிசையை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எந்த மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார்பாரதி கைவிட வேண்டும். மாறாக, நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.