“இது எண்ணிக்கை பற்றியது அல்ல.. அதிகாரத்தை பற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறப்பதற்கான வல்லுநர் குழு அமைக்க பரிந்துரைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மமற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” மாநிலக் கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் பங்கேற்பது மாபெரும் சிறப்பு. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும்.
ஓரணியில் திரண்டுள்ள கட்சிகளின் குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு என பெயரிடுகிறோம். ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரண்டுள்ளோம். இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது, இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரத்தை பற்றியது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறப்பதற்கான வல்லுநர் குழு அமைக்க பரிந்துரைக்கிறேன். தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம். சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இந்த மறுவரையறை நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் போராடியதால் தான் சுதந்திரம் கிடைத்தது.
தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஏற்க முடியாது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நமது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும். நியாயமில்லாத தொகுதி மறுசீரமைப்பால் நாம் அரசியல் அதிகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம்.
தொகுதி மறுசீரமைப்பை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது. பாஜக உள்நோக்கத்தோடு தொகுதி மறுசீரமைப்பை நிறைவேற்ற நினைக்கிறது. மணிப்பூர் 2 ஆண்டுகளாக பற்றி எரிகிறது. நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இது நமது உரிமைகள் மற்றும் எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி உள்ளோம்.
தென் மாநிலங்களில் விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை இழக்காது என்று உள்துறை அமைச்சர் கூறினார். அவரது விளக்கம் குழப்பமாக இருந்தது. தென்மாநில தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை பிரதமரே தெலங்கானா பரப்புரையில் ஒப்புக்கொண்டார்.
எப்போதும் மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக உள்ளது; இதனை எந்த மாநிலமும் அனுமதிக்கக்கூடாது. இந்த அச்சுறுத்தலை உணர்ந்து முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையோடு தமிழ்நாடு செயல்படுகிறது. இதேபோன்ற ஒற்றுமையை இந்த அரங்கிலுள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும்” இவ்வாறு பேசியுள்ளார்.