“அது எடிட் தான்.. சீமான் பொய் தகவலையே கூறி வருகிறார்”…இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் வெட்டி ஒட்டப்பட்டதுதான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில் மற்றொரு பக்கம் அவர் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட்டி செய்யப்பட்டது எனவும் அதனை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் எனவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமானும் பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” நானும் பிரபாகரனும் உள்ள படத்தை, வெட்டி ஒட்டியதாக கூறுகிறீர்களே, அதற்கு ஆதாரம் காட்டுங்கள். 15 வருடங்களாக இந்த படம் உள்ளது. எனவே, நீங்கள் எடிட் செய்து கொடுத்தீர்கள் என்றால் 15 வருடங்கள் எங்கு இருந்தீர்கள்? எப்படி வெட்டி ஒட்டினார் என்பதை அவரிடமே கேளுங்கள்” என கட்டத்துடன் பேசியிருந்தார்.
இதனையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த “ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? சீமானுக்கு ஏன் இவ்வளவு குழப்பம்?” என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உண்மையில் அந்த புகைப்படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன். என்னிடம் எப்படி புகைப்படத்தை வெட்டி ஓட்டினேன் என்று ஆதாரம் கேட்கிறார். அது தான் சமூக வலைத்தளங்களில் எப்படி வெட்டி ஓட்டுகிறார்கள் என்ற ஆதாரத்தை காண்பித்து கொண்டு தானே இருக்கிறார்கள். பிறகு எதற்காக என்னிடம் ஆதாரம் கேட்கிறார் என புரியவில்லை. பிரபாகரனை நான் பொய் என்று சொல்லிவிட்டேன் என்றும் கூறுகிறார். நான் எப்போதுமே அப்படி சொல்லவில்லை.
தலைவர் பிரபாகரன் தான் உலகத்தில் உண்மையான தலைவன். இந்த விஷயத்தில் சீமான் ஏன் இவ்வளவு குழம்புகிறார் என உண்மையாகவே தெரியவில்லை. நேற்று என்னைப்பற்றி அவர் பேசிய காரணத்தால் தான் இப்போது விளக்கம் அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீடு சம்பந்தமாக சீமான் குரல் கொடுத்தபோது அவருக்கு போன் செய்து பாராட்டினேன்.
சமூக நீதி சார்ந்து எந்த இடத்தில் கை வைத்தாலும் தந்தை பெரியாரில் தான் போய் முடியும். எனவே, சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று நான் சீமானிடம் தெரிவித்தேன். அது அவருக்கு பிடிக்கலாம் சரி சரி என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
பிறகு நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் வன்னிய மக்களை கைவிட்டுவிட வேண்டாம்.வன்னிய மக்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று நான் கூறியதாகவும் அவர் பேசியுள்ளார். உண்மையில் நான் அப்படி சொல்லவில்லை. சீமான், தொடர்ந்து பொய்யான தகவலையே கூறி வருகிறார். உண்மைக்கு மாறாக பேசிய சீமான் கண்டிப்பாக ஆதாரம் அளிக்க வேண்டும்” எனவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.