‘இன்று மாலை தற்காலிக புயலாக வலுப்பெறும்..’-தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி!
இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது.
அதன்பிறகு, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் பரவலாக மழை பொலிவானது ஏற்பட்டது. இந்த நிலையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது வலுப்பெறும் எப்போது கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 490 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, இது தொடர்ந்து 30-ம் தேதி காலை வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் – மகாபலிபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
இது கரையைக் கடக்கும் போது அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும். அதனால், மீனவர்கள் 30-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்”, என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.