சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை.. இது ஹிட்லர் ஆட்சியா.? இபிஎஸ் கடும் கண்டனம்.!
சென்னை: தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். பின்னர் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்க இருந்த நிலையில், அதனை தவிர்த்து கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை அவை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவை நிகழ்வுகள் தனது கண்டனங்களை பதிவு செய்தார்.
அவர் பேசுகையில், எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. சிகிச்சை பெற்று வருவதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன. சேலத்தில் சிகிச்சை பெற்று வரும்பவர்களுக்கு கண்பார்வை தெரியவில்லை இதுகுறித்து நாங்கள் விவாதம் நடத்த கோரினோம். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
மக்கள் பிரச்சனை குறித்து பேச நினைக்கும் எங்களை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை. எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஆர்.பி.உதயகுமாரை குண்டுக்கட்டாக வெளியேற்றும் அளவுக்கு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
திமுக அரசு ஒரு ஹிட்லர் ஆட்சி போல சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது . இதற்கு பொறுப்பேற்று அரசாங்கம் பதவி விலக வேண்டும். எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற வெளிப்படைத்தன்மை இல்லை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய பாதிப்பு சிகிச்சைக்கு தேவைப்படும் முக்கியமான மருந்து அரசிடம் போதிய இருப்பு இல்லை. ஆனால், முன்னதாக அமைச்சர் ஏ.வ.வேலு அனைத்து மருந்துகளும் இருக்கிறது என பச்சைப்பொய் கூறுகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இன்னும் பலரது உடல்நிலை மருத்துவமனைகளில் கவலைக்கிடமாக உள்ளது என கூறுகிறார்கள். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.