ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது 7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதற்குஇடையில் உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு நிலையில்,பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தது அதிமுக அரசு . விடுதலை குறித்து அமைச்சரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம் .7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.