தமிழகத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பது உண்மை. ஆனால்? – முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை..!

Default Image

தமிழகத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பது உண்மை. ஆனால்,அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்தை மறுக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

மறுக்ககூடாது:

“தமிழகத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பது உண்மை. ஆனால், அதைக் காரணமாகக் காட்டி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் ஆகிய வழக்கமான நடைமுறைகளை மறுக்ககூடாது.

இது அரசின் கடமை:

அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது அரசு ஊழியர்கள்தான். அவர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியமும் வழங்குவது அரசின் கடமையாகும். ஆனால், அதனை மாற்றும் விதமாக பொது விவாதத்தை கிளப்புவதன் உள்நோக்கம் என்னவோ?.

கூடுதல் அகவிலைப்படியும், ஓய்வூதியமும் ஊழியர்களுக்கு தரப்படும் சம்பளத்தின் பகுதிகளே ஆகும். விலைவாசி உயர்விற்கேற்ப சம்பளம் உயர வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கை.

இவர்களுக்கு வரப்பிரசாதமாகிவிடும்:

ஊதியம் வழங்குவதில் முன் மாதிரியாக செயல்பட வேண்டிய அரசாங்கமே, தவறான தத்துவத்தை முன்வைத்தால் – ஏற்கனவே தொழிலாளர்களின் உரிமைகளை தட்டிப் பறித்துக் கொண்டுள்ள தனியார் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாகிவிடும்.

ஆட்சி மாற்றம்:

தமிழகத்தில் இதே கருத்துக்களை ஏற்கனவே ஆட்சியாளர்கள் செயல்படுத்த முயன்று, மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நாம் அறிந்ததே. இப்படியான துருப்பிடித்த வாதங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும்.

அரசு இதை செய்ய வேண்டும்:

நாட்டின் நிதிநிலைமை, நெருக்கடியில் இருக்கும்போது மக்களுடைய வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு தரப்படும் ஊதியம், சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அப்போதுதான் வரி வருவாயும் அதிகரிக்கும்.

ஊதியம் குறைந்து வாங்கும் சக்தியில் பாதிப்பு ஏற்பட்டால், வரி வருவாயிலும் சரிவு ஏற்படும். இதனை கணக்கில் கொண்டே கொரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல முதலாளித்துவ நாடுகள், மக்களின் கையில் குறிப்பிடத்தக்க நிதியை நிவாரணமாக வழங்கினார்கள்.

நாமும், மாதம் குறைந்தது ரூ.7500 எளிய மக்களின் கைகளில் தரவேண்டும் என மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசாங்கம், மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைப் பெறவேண்டும், முறையாக வரி வசூல் & பிற சாத்தியமான வழிகளில் நிதி திரட்டி பொதுச்செலவுகளை அதிகரிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி:

சரியான தீர்வுகளைத் தேடி நிலைமைகளைச் சீராக்குவது அரசின் கடமை, அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நேர் மாறாக செலவினங்களை வெட்டிச் சுருக்கி, அதன் வழியாக நெருக்கடியை தீர்க்கலாமென நினைப்பது, பிரச்சனையை திசைதிருப்புவதாக அமைந்திடும், பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் தள்ளிடும்.

எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த விசயத்தில் தலையீடு செய்ய வேண்டும், நிதிச் செலவினங்கள் குறித்த அணுகுமுறையை மாற்றியமைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்