முதலமைச்சர் சொல்வதை செயல்படுத்துவது ஆளுநரின் கடமை; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.!
ஆளுநர் நடுநிலையாக செயல்படவேண்டும், அரசியல் பேசக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் 15 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இது குறித்து கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கேட்கப்பட்டபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் முதலமைச்சரும் ஆளுநரும் இணைந்து செயல்படவேண்டும், அதுதான் தமிழக நலனுக்கு நல்லது என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதனை செயல்படுத்துவது தான் ஆளுநர் கடமை. ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. ஆளுநர் என்பவர் நீதிபதிகளைப்போல், ஆளுநர் தனிப்பட்ட அரசியல் கட்சியைச்சேர்ந்தவராக இருந்தாலும் அவரது அரசியல் கருத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று தெரிவித்தார்.
தவறு நடந்தால் சுட்டிக்காட்டலாம், ஆனால் அதைவிட்டுவிட்டு அரசியல் கருத்து, கொள்கைகளை சொல்லக்கூடாது. நீதிபதிகள், ஜனாதிபதி இவர்கள் எல்லாம் எங்கும் அரசியல் பேசியது கிடையாது. அதேபோல் ஆளுநரும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.