“பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை”..மருத்துவர்களுடன் போராடிய பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது என மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜியை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மேலும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மருத்துவர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “மருத்துவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எந்தவிதத்திலும் மக்களை பாதுகாக்கவில்லை என்றால், நிச்சயமாக மக்களின் எதிர்ப்பை இந்த ஆட்சி சந்திக்க நேரிடும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இன்றைக்கும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை, மீனவர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என இப்படி ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
75 ஆண்டு கால ஆட்சியில் இருக்கிறோம் என்று பெருமை பேசும் திமுக, ஆட்சிக்கு வரும் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய வெள்ளத்திற்கு, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேரளாவை போல நீதியரசர்கள், இந்த அரசு செய்யும் அத்தனையையும் சுட்டி காட்டி அதற்கான தீர்வை கொண்டு வரவேண்டும்”, என பிரேமலதா விஜயகாந்த் பேசி இருந்தார்.