இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும் கடமை அரசுக்கு உண்டு – ஓபிஎஸ்
பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்.
தமிழகத்தில், கோவை, கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவங்கிய இந்த பெட்ரோல் குண்டு வீச்சு, ஈரோடு, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது.
இதில் அப்பாவி மக்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்றால், இதற்கு தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது. எங்கு, எப்போது பெட்ரோல் குண்டு வீசப்படுமோ என்று மக்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததுதான் என்ற எண்ணம் தற்போது பொதுமக்களிடையே மேலோங்கி உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சட்டம், ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்! pic.twitter.com/7J1idY1Op2
— O Panneerselvam (@OfficeOfOPS) September 26, 2022